ஒரு மனிதனின் குணாசியத்தை(Characteristic) மாற்றக்கூடிய நோய்களில் ஒன்று மூலம். ஒருவர் எப்போதும் சிடுசிடு என்று இருந்தாலோ, அடிக்கடி அதிகமாக கோபப்பட்டாலோ, பதட்டமடைந்தாலோ, முகம் எப்போதும் கவலையோடு காணப்பட்டாலோ அவருக்கு பைல்ஸ்(piles or hemorrhoids) இருக்கிறதா? என்று கேட்பார்கள். உண்மைதான். மூலம் இருந்தால் மேற்சொன்ன குணங்கள் இருக்கும். இந்த மூலம் ஏன் வருகிறது? எப்படி தவிர்ப்பது?
‘உடலிலோ, மனதிலோ ஏதேனும் பிரச்சினை என்றால் உட்கார்ந்து யோசிக்கலாம் என்று நினைப்போம். உட்கார்வதே பிரச்சினை எனும்போது அது பதட்டம், கோபம், சிடுசிடுப்புத் தன்மையை ஏற்படுத்தும். ஆசனவாயில் எந்த பிரச்சினை வந்தாலுமே அதை மூலம் என்றுதான் சொல்வார்கள்.
ஆசனவாயில் சீழ் கட்டியிருந்தாலோ, ரத்தம் வந்தாலோ, வெடிப்பு இருந்தாலோ, புண் இருந்தாலோ அவை எல்லாமே மூலம் அல்ல. மூலம் வேறு; ஆசனவாய் வெடிப்பு வேறு; பௌத்திரம் என்பதும் வேறு. ஆசனவாய் ரத்தம் வெளியேறுவது புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறியாகவும் இருக்கலாம்.
ஆசனவாயில் இருக்கும் ரத்தக்குழாய்கள் வீக்கமடைந்து நாளடைவில் கட்டியாக மாறுகிறது.
நீண்டநேரம் நிற்கக்கூடிய வேலையில் இருப்பவர்களுக்கு காலில் ரத்தஓட்டம் குறைந்து ரத்தக்குழாய் வீங்கி வெரிகோஸ் வெயின்(Varicose vein) என்கிற நோய்வரும். நீண்டநேரம் உட்கார்ந்துகொண்டு செய்யக்கூடிய வேலையில் இருப்போருக்கு மூலம்(piles) வரலாம். அதாவது அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லக்கூடிய ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்படுவதே மூலம்.
ஆசனவாயின் வலது பக்கத்தில் இரண்டும், இடது பக்கத்தில் ஒன்றுமாக என மூன்று முக்கியமான ரத்தக்குழாய்கள் இருக்கின்றன. ஒரு கடிகாரத்தை கற்பனை செய்துகொண்டால் 3 கிளாக் பொசிஷன், 6 கிளாக்
பொசிஷன், 11 கிளாக் பொசிஷன் என்று மூன்று இடங்களில் அந்த ரத்தக்குழாய்கள் அமைந்திருக்கும். அந்த ரத்தக்குழாய்களில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும்போது அது வீங்கிக்கொள்ளும். மீண்டும் அழுத்தம் அதிகமாக ஆக அதில் சிராய்ப்பு அல்லது வெடிப்பு ஏற்பட்டு காயமுண்டாகி மூலம் ஏற்படும்.
இன்றைய வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், உணவுப்பழக்க வழக்கங்கள், எடுத்துக் கொள்ளும் மருந்துகள், உடற்பயிற்சி இல்லாத சோம்பலான வாழ்க்கைமுறை, உடல்பருமன், நீரிழிவு, பிபி, மேலைநாட்டு காரவகை உணவுகள் இவற்றால் மூலம் வரக்கூடும்.
தொடர்ந்து மலச்சிக்கல் பிரச்சினையில் இருப்பவர்களுக்கு ஆசனவாயில் இருக்கும் சுருங்கிவிரியும் தசையில் வீக்கம் ஏற்பட்டு கீழ்நோக்கிய சரிவு ஏற்படுவதையே மூலம் என்கிறோம். மூலநோய் அறிகுறிகள்
மலம் கழிக்கும்போது வலியோ அல்லது கட்டி ஒன்று வெளியே வருவதும், பின் உள்ளே செல்வதுமாக இருக்கும்.
நீண்டநேரம் உட்கார்ந்திருந்தாலும் வலி இருக்கும்.
ஆசனவாய் எரிச்சல்(Anal irritation), அரிப்பு(itching), கட்டி(tumor) இருக்கும்.
யாருக்கெல்லாம் வரலாம்?
வயது வித்தியாசம் இல்லாமல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வரலாம்.
சிலருக்கு பிறவிலேயே ஆசனவாய் சுருக்குத் தசைகளில் வலு இல்லாமல் இருக்கலாம். சிலருக்கு ரத்தக்குழாய்கள் உறுதியாக இல்லாமல் இருப்பதாலும் வரலாம். ஒரே குடும்பத்தில் பலருக்கு வருவதற்கு இதுவே காரணம்.
50 சதவீதத்துக்கு மேல் நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு மூல நோய் வரும். அதிலும் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக வரும்.
கர்ப்பகாலத்தில் இடுப்புப் பகுதியில் இருக்கக்கூடிய பெரும்பாலான ரத்தக்குழாய்கள் அழுத்தப்படுவதால் மூலநோய் வரக்கூடும். ஆறேழு மாதத்திற்குப் பிறகு கால்வீக்கம்கூட இதனால் ஏற்படும். கருப்பைக்கு பின்னால் இருக்கும் மலக்குடல் அழுத்தப்படுவதால் மூலநோய் வரலாம்.
அதிக உடல் எடை கொண்டவர்கள் உட்காரும்போது அந்தப் பகுதி அழுத்தப்படுவதால் வரலாம்.
மாவுச்சத்துப் பொருட்களை அதிகமாகவும், நார்ச்சத்து பொருட்களைக் குறைவாகவும் எடுத்துக் கொள்வதால் இந்தப் பிரச்சினை வரலாம்.
நீண்டநேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், அதிக வெப்பம் தாக்கும் இடத்தில் வேலை செய்பவர்களுக்கு வரலாம். பெரும்பாலும் அரபு நாடுகளில் வேலை செய்யும் நிறைய பேருக்கு இந்தப் பிரச்சினை வருகிறது.
சிக்கனை அதிகமாக எடுத்துக்கொள்வது, அதிக எடையைத் தூக்கும் வேலையில் இருப்பவர்கள் ஆகியோருக்கும் வரலாம்.
சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கும், பிபி இருப்பவர்களுக்கும் வரக்கூடும்.
மூலநோய்க்கும், உடலில் ஏற்படும் மற்ற நோய்க்கும், ஆசன வாய்ப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம் மலச்சிக்கல்தான். மலச்சிக்கல் ஏன் உண்டாகிறது என பார்க்கலாம்.
மலச்சிக்கல்(Constipation) ஏன் வருகிறது?
மலச்சிக்கல் வருவதற்கு உளவியல் காரணம் மற்றும் உடலியல் காரணம் என இரண்டு காரணங்கள் இருக்கின்றன.உடலியல் காரணம் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ளாமை, தண்ணீர் அதிகம் குடிக்காமை ஆகியவை முக்கிய காரணங்கள். நாம் சாப்பிடும் உணவானது ஒரு கூழ் போலாகி பெருங்குடலுக்கு வரும். பெருங்குடலில் 80 சதவீத நீர் உறிஞ்சப்பட்டு அதில் ஒரு திரவம் சுரக்க ஆரம்பிக்கும். பின்னரே அது வெளியேற்றப்படும்.
துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்துள்ள மாத்திரையோ, ஸ்டீராய்டு மாத்திரையோ எடுத்துக்கொள்ளும்போது உடல்ரீதியாக
மலச்சிக்கலை ஏற்படுத்தும். மலச்சிக்கலைத் தவிர்த்தால் மூலநோயைத் தவிர்க்கலாம்.
தீர்வு
எந்த ஒரு காரணத்திற்காகவும் மலத்தை அடக்கக் கூடாது. மலம், சிறுநீர் இவை இரண்டையும் அடக்காமல் இருந்தாலே பல நோய்களைத் தவிர்க்கலாம்.
தினமும் ஒரே நேரத்தில் காலைக் கடன்களைக் கழிக்குமாறு பழகிக்கொள்ள வேண்டும்.
உணவில் கொய்யா(Guava), பப்பாளி(Papaya), பேரிக்காய்(Pear), காய்ந்த திராட்சை(Raisin), நாட்டு வாழைப்பழம்(Native banana), பேயன் வாழைப்பழங்களை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வாழைத்தண்டு(banana stem), முட்டைக்கோஸ்(Cabbage), புடலங்காய்(Snake Gourd), கீரைகள்(Greens), பாகற்காய்(Cantaloupe) இவை மலச்சிக்கலைப் போக்கும்.
தினமும் 3 லிட்டர் குடிக்க வேண்டும். அதிலும் காலை எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்தால் நல்லது அல்லது எழுந்து ஒரு மணி நேரத்திற்குள் ஒரு லிட்டர் தண்ணீரைக் குடிக்கும்போது குடல் சுத்தமாகும். அதேபோல காலை, மாலை, இரவு என சாப்பிட்டு இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு மூன்று டம்ளர் தண்ணீர் குடித்தாலே போதும்.
ஆசனவாய் சீழ்கட்டி(Anus abscess)
ஆசனவாய் பகுதியில் இருக்கும் சுரப்பிகளில் அடைப்போ அல்லது சிதைவோ ஏற்படுவதையே ஆசனவாய் சீழ்கட்டி என்று கூறுகிறோம். சுரப்பிகளில் ஏற்படும் தொற்றும் ஒரு காரணம். இவர்களுக்கு வலி அதிகமாக இருக்கும். குளிர்ஜுரம் வரலாம். இவர்களால் உட்காரவே சிரமமாக இருக்கும். இந்த பிரச்சினையில் பாதிக்கப் பட்டவர்களுக்கு சீழை வெளியே எடுத்துவிட்டாலே குணமாகிவிடும். மலம் போகும்போதும், இருமும்போதும் வலி ஏற்படும்.
ஆசனவாய் வெடிப்பு(Anus eruption)
பனிக்காலத்தில் உதட்டில் வெடிப்பு ஏற்படுவதைப்போல ஆசனவாய்ப் பகுதியில் இருக்கக்கூடிய சுருக்குத்தசையில் ஏற்படக்கூடிய பிளவையே ஆசனவாய் வெடிப்பு என்கிறோம். இது மலச்சிக்கலால்தான் வருகிறது. தொடர்ந்து வயிற்றுப்போக்கு, ஆசனவாயில் அடிபடுதல் அல்லது எரிச்சல் ஏற்படுதல் இதனாலும் வெடிப்பு வரலாம்.
யாருக்கு வரலாம்?
ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்கு ஆசனவாயில் தளர்வு ஏற்படுவதால் அவர்களுக்கு ஏற்படாது. ஆனால் சிறுவயதில் இருக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அதிகம் வரக்கூடும்.
அறிகுறிகள்(Symptoms)
மலம் கழிக்கும் உணர்வு வரும்போதே வலி எடுக்க ஆரம்பிக்கும். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு தானாகவே வலி குறைய ஆரம்பித்துவிடும்.
மலம் கழிக்கும்போது தசைகள் விரிவடையும். தசைகளில் வெடிப்பு இருப்பதால் அது வலியைக் கொடுக்கும். இவர்களுக்கு மலத்துடன் சில நேரங்களில் ரத்தமும் வெளியேறும்.
தீர்வு
இவர்கள் ஆசனவாய் பகுதியை சுத்தமாக வைத்துக் கொண்டாலே பெரும்பாலும் இந்த வெடிப்பு தானாகவே சரியாகிவிடும்.
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம்.
திரிபலா சூரணம் அல்லது கடுக்காய் பொடி எடுத்துக் கொள்வது இந்த சிக்கலைத் தீர்க்க உதவும்.
இதனுடன் ஆசனவாய்ப் பகுதியில் வெண்ணெய் தடவினாலும் ரணம் ஆறி குணம் கிடைக்கும்.